ல்பாக்கம்

சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 150 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது.

சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில், சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது.   அந்த இடத்துக்கு இந்த ஆலமரம் ஒரு அடையாளமாக இருந்து வந்தது. இதுவரை மழை, காற்று, புயல் வந்தபோதெல்லாம் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயினும் இந்த ஆலமரம் மட்டும் அசையாமல் அத்தனை சூறை காற்றையும் தாங்கி நின்றது.

சுமார்150 ஆண்டுகளைக் கடந்த  மரத்தின் அதன் வேர்கள் வலிமை இழந்தது.  கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால், வியாழன் மதியம் சுமார் 1 மணியளவில், இந்த மரம் திடீரென கிழக்கு கடற்கரைச் சாலையில் வேருடன் சாய்ந்தது.  இதில் ஒரு காய்கறி கடையும், மின் கம்பமும்  சேதமடைந்தது. முக்கிய சாலையான  சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் முழுவதுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை மார்க்கமாகச் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த வாகனங்கள், வெங்கப்பாக்கத்தில் திருப்பி விடப்பட்டு,  சதுரங்கப்பட்டினம்,  புதுப்பட்டினம் பஜார் வீதி வழியாக  வந்து மீண்டும் கிழக்கு கடற்கரைச் சாலை   வழியாகப் புதுச்சேரிக்குச் சென்றன. கிழக்கு கடற்கரைச் சாலையில் விழுந்த பெரிய ஆல மரத்தை அகற்றும் பணியில் பலமணி நேரம் ஊழியர்கள் ஈடுபட்டும் முடியவில்லை. அதன் பின்னர் பொக்லைன் இயந்திரம் மற்றும் மரம் வெட்டும் இயந்திரங்களைக் கொண்டு வந்து நேற்று இரவு முழுமையாக அகற்றப்பட்டன.

கிராம மக்களுக்கு நிழலையும் கிராமத்துக்கே அடையாளமாக இருந்ததுமான அந்த ஆலமரம் தங்களுக்கு நிழலை அளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் அந்த பேருந்து நிறுத்தத்தின் பெயராக ஆலமரம் பஸ் ஸ்டாப் என இருந்ததையும் அவர்கள் கவலையுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.  அத்துடன் இந்த ஆலமரத்தை மீண்டும் புதுப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.