அமெரிக்க தேர்தலில் சம்பந்தப்பட்ட மோசடி கோடீசுவரர் : ரஷ்ய அதிபர் புடின் அதிர்ச்சி தகவல்

ஹெல்சின்கி

மெரிக்க தேர்தலில் சம்பந்தப்பட்ட கோடீசுவரர் குறித்து விசாரிக்க அமெரிக்க அதிபரின் உதவியை ரஷ்ய அதிபர் கேட்டுள்ளார்.

ஃபின்லாந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்துவதை முன்னிட்டு நேற்று ரஷ்ய அதிபர் புடின் செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஆன பில் பிரவுடர் பற்றிய தகவல்களை தெரிவித்தார்.

அந்த சந்திப்பில் புடின், “பில் பிரவுடர் சுமார் 1500 கோடி டாலர்களை ரஷ்யாவில் சம்பாதித்துள்ளார்.    ஆனால் அவர் அதற்கான வரியை ரஷ்யாவிலோ அமெரிக்காவிலோ இதுவரை செலுத்தவில்லை.   ஆனால் இந்த பணத்தை சட்டவிரோதமாக ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.   நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் ஹிலாரி கிளிண்டனின் பிரசாரத்துக்காக 40 கோடி டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.

பில் பிரவுடர்

நன்கொடை அளிப்பது அவருடைய சொந்த விருப்பம்.    ஆனால் அது சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும்.   அந்தப் பணம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.    இவ்வாறு நடத்த அமெரிக்க அரசு அதிகாரிகளும் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு கோடீசுவரர் பில் பிரவுடர் மறுப்பு தெரிவித்துள்ளார்.   அவர், “நான் ஹிலாரி கிளிண்டனுக்கு நன்கொடை அளிக்கவில்லை.   நான் அமெரிக்க குடிமகன் இல்லை.   அமெரிக்காவில் வசிப்பவனும் இல்லை.  பிரிட்டன் நாட்டில் கடந்த 29 வருடங்களாக வசித்து வருகிறேன்.  இதுவரை எந்த ஒரு தேர்தல் பிரசாரத்துக்கும் நன்கொடை அளித்ததில்லை.   ஏற்கனவே ரஷ்ய அதிபர் புடின் என் மீது சிஐஏ உளவாளி, எம் 16 ஏஜண்ட் என ஆயிரக்கணக்கான பொய்க்குற்றங்கள் சுமத்தி உள்ளார்.  அவ்ற்றில் இதுவும் ஒன்று” எனக் கூறி உள்ளார்.