மாஸ்கோ:

ரஷ்யா அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் 70 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் முறைப்படி இன்று அதிபராக பதவி ஏற்றார்.

4வது முறையாக அதிபராக பதவியேற்ற அவர் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ரஷ்ய அரசியலமைப்பின் படி 4 முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது. 2024-ம் ஆண்டுடன் புடின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிடும். எனினும் சீனாவை போல அதிபர் பதவியில் எத்தனை முறை வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வர புடின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கிரெம்ளின் மாளிகையில் சாதாரணமாக நடந்த பதவியேற்பு விழாவில் அரசியல் சாசனத்தை கையில் வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டார். ‘‘பொருளாதார சீரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்’’ என்று பதவி ஏற்புக்கு பின் புடின் தெரிவித்தார்.