Random image

புழல் சிறை ஒரு உல்லாச விடுதி! :  கைதிகள் எடுத்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பு

புழல் சிறையில் கைதிகள் “வசதி வாய்ப்பாக” தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.  ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கைதிகளின் உறவினர்கள் புகார் கூறிய தகவல் சமீபத்தில் வெளியானது. .

இதேபோல கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. அதில், “சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த புகைப்படங்களில், உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது தெரிகிறது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு இருக்கின்றன.

 

அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் விரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த தலையணைகளும் இருக்கின்றன.

சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் கிடைப்பது தெரியவருகிறது.

கைதிகளும் சிறை உடை அணியாமல், விலை உயர்வான உடைகளை அணிந்து அப்படங்களில் போஸ் கொடுக்கிறார்கள். விலை உயர்ந்த ஷூக்களையும் அவர்கள் அணிந்துள்ளனர். மேலும் சிலர் டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் காட்சி அளிக்கிறார்கள்.செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.

சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் சிறை வளாகத்தில் “ஹாயாக” நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார்.

]இதேபோல அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இனியாவது கைதிகளுக்கு முறைகேடாக உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.