உலக பேட்மிண்டன் போட்டியில் அசத்தும் சிந்து, சமீர் – 3போட்டிகளில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு தகுதி!

உலக பேட்மிண்டன் இறுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் ஆண்கள் பிரிவில் சமீர் வர்மா வெற்றிப்பெற்றார்.

badminton

பேட்மிண்டன் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கான உலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய முதல் போட்டியில் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை பிவி சிந்து நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை யமாகுச்சியை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.

அதன்பிறகு நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தாய் ட்ஜூ யிங்கை வீழ்த்தி சிந்து அபார வெற்றிப்பெற்றார். இதற்கு முன்பாக 6 முறை தாய்யை எதிர்கொண்ட சிந்து தோல்வி அடைந்த நிலையில் முதல் முறையாக வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடத்தப்பட்டது. இதில் சிந்து அமெரிக்க வீராங்கனை பெய்வின் ஜாங்கை எதிர்க்கொண்டார். போட்டி தொடங்கியதும் முதல் செட்டை 21-19 என்ற நேர்செட்களில் சிந்து கைப்பற்றினார். அதையடுத்து 2வது சுற்றிலும் அசத்திய சிந்து 21-15 என வென்றார்.

இறுதியாக அமெரிக்க வீராங்கனையை 21-19, 21-15 என்ற செட்களில் வீழ்த்தி சிந்து வெற்றிப்பெற்றார். இதன் மூலம் இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்ற இந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சமீர் வர்மா மூன்றாவது போட்டியில் தாய்லாந்தின் வீரர் காந்தோப்பனை 21-9, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.