காயிதே மில்லத் 124-வது பிறந்தநாள்: ஸ்டாலின், ஓபிஎஸ் உள்பட தலைவர்கள் மரியாதை

சென்னை:

காயிதே மில்லத் என்று அழைக்கப்படும் முகமது இஸ்மாயிலின் 124-வது பிறந்த நாள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஆட்சி மொழியில் தமிழை ஒன்றாக இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகவும், அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

கடந்த 1972ம் ஆண்டு காலமான இவரது உடல், திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று அவரது  124-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 8 மணியளவில் திருவல்லிகேணி நெடுஞ்சாலையில், வாலாசா பள்ளிவாசலில் உள்ள காயிதேமில்லத் அவர்களின் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து காயிதே மில்லத் நினைவிடத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரும் வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன் உள்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதிமுக நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இன்று  காலை முதல் ஏராளமான அரசியல் கட்சியினர் இங்கு வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.