முதன்முதலாக வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசிய ராணி எலிசபெத்!

லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதன்முதலாக பொது மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பேசியுள்ளார்.

பிரிட்டனின் ராணியாக, கடந்த 68 ஆண்டுகளாக பதவி வகிக்கிறார் இரண்டாம் எலிசபெத். 94 வயதான இவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தனது கணவர் இளவரசர் பிலிப்(99) உடன் விண்ட்ஸர் கோட்டையில் கடந்த 3 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், முதன்முறையாக, பொது மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ராணி உரையாடினார். அரண்மனையில் உள்ள ‘ஓக்’ அறையில் இருந்து வீடியோ காலில் சுமார் 20 நிமிடம் அழைப்பில் இருந்தார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 4ம் தேதி நிகழ்ந்துள்ளது.

வீடியோ அழைப்பில், “நீங்கள் அனைவரும் கூறுவதைக் கேட்க சுவாரஸ்யமாக உள்ளது. நீங்கள் ஏற்கனவே சாதித்தது பற்றி நான் ஈர்க்கப்பட்டேன். இன்று உங்களுடன் சேர்ந்து பேசியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறினார்.

தற்போதுவரை, பிரிட்டனில், 2.91 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.