பெங்களூரு:

டுத்த ஆண்டு (2020) சென்னை உள்பட நாடு முழுவதும் 21 நகரங்களில் நிலத்தடி நீர் கிடைக்காது என்று  நிதி ஆயோக் நடத்திய மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் சுமார் 10கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. குறிப்பாக சென்னையை சுற்றி உள்ள ஏரிகள் வறண்டு விட்டதாலும், பல ஏரிகள், விளை நிலங்கள் வீடுகளாக மாறிவிட்ட நிலையில் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் கடலுக்குள் சென்று வீணாகிறது.

மேலும், அரசின் தவறான முடிவு காரணமாக, குறிப்பாக சிமெண்ட் சாலைகள், மழைநீர் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் உள்பட அனைத்து வகையான கால்வாய்களையும் காங்கிரீட் கால்வாய் களாக  மாற்றி விட்டதாலும், பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக, பெரும்பாலான இடங்கள் காங்கிரீட்டால் மூடப்பட்ட நிலையிலும்,  மழைநீர் பூமிக்குள் செல்வது தடைபட்டு, நிலத்தடி நீர் அதள பாதாளத்தக்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் நிதி ஆயோக் மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழு மூலம் நடத்திய ஆய்வு முடிவில், சென்னை உள்பட 21 நகரங்கள் நிலத்தடி நீர் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழுவின் 23-வது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டில் ( 2020) டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை  உள்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

உலகிலுள்ள நாடுகளில் அதிகமாக நிலத்தடி நீரை இன்று உறிஞ்சும் நாடாக இந்தியா மாறியிருப்ப தாகவும்,   தற்போது 2.1 கோடி கிணறுகள் மூலமாக ஓர் ஆண்டில் ஏறக்குறைய 253 கன கிலோ மீட்டர் (பிசிஎம்) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.  அதாவது, ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிட்டுள்ள மொத்த நிலத்தடி நீர் 411 பிசிஎம், இதில் 62%-த்துக்கும் மேலாகத் தற்போது உறிஞ்சப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரின் அளவு 18.59 பிசிஎம் அளவிலானது  என்று தெரிவித்துள்ள நிலையில், இதில் 77 சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்போது பயன்படுத்தப்பட்டு விட்டது என்றும் கூறி உள்ளது.

அதிகரிக்கும் நீர்த் தேவையால் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்டு வருவதாகவும், இதில் தமிழகமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது

தமிழகத்தில் உள்ள  32 தமிழக மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80 சதவிகிதத்துக்கும் மேலாகச் சுரண்டப்பட்டு விட்டது என்று விவரித்துள்ள நிலையில், இதற்கு மேலும்  நிலத்தடி நீரை உறிஞ்சுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த  2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1139 ஆய்வில், 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக வும், 105 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், 35 இடங்களில் நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமை யாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 3,000 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், மழை என்ற பெயரில் நமது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான மழை பெய்கிறது. சுமார்  4,000 பில்லியன் கன மீட்டர் மழை நமக்கு கிடைக்கிறது. .ஆனால், அரசுகளின் திறமையின்மை மற்றும் தவறான பயன்பாட்டால் அதிகப்படியான நீர் வீணடிக்கப்படுகிறது என்றும் சாடியுள்ளது.

இந்தியாவில் சுமைப் புரட்சி தொடங்கிய பிறகே நிலத்தடி நீரின் உபயோகம் அதிகரித்திருப்பதாக வும்,  1970ம் ஆண்டு கொண்டு வந்த பசுமைப் புரட்சிக்கு பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்க ளோடு அதிக அளவிலான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டதால், ஆழ்குழாய்க் கிணறு தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதன் அபரிமித வளர்ச்சியால் நிலத்தடி நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்து வந்துள்ளது.

இது கடந்த  2000-01க்குப் பிறகு மேலும் அதிகரித்ததால்,  1960-61ல் 7.30 மில்லியன் ஹெக்டேர் களாக இருந்த நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு, 2016-17ல் 71 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துவிட்டது. அதாவது, மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில்  நிலத்தடி நீரின் பங்கு 29%-லிருந்து 68%-ஆக அதிகரித்துள்ளது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில் தமிழகஅரசு வெளியிட்டுள்ள  புள்ளிவிவரப்படி, 2000-01ல் மொத்தமாக 18.33 லட்சம் கிணறுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 1.59 லட்சம் கிணறுகள் உபயோகத்துக்குப் பயன்படாமல் போய்விட்டன. அதிக அளவு நிலத்தடி நீரை இவை உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி அவை பயனற்றுப் போய்விட்டதாக தெரிவித்து உள்ளத.

நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 1,139 வட்டங்களில், 96  வட்டங்களில், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

இந்தியாவில் மொத்தமாகவுள்ள 6,584 வட்டங்களில், 32% வட்டங்களில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் அளவுக்கு அதிகமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், விவசாயத்துக்கு சொட்டு நீர்ப்பாசனமே சிறந்தது, அதையே ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. மேலும்,  அனைத்துத் துறைகளி லும் நீர்த் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை  செய்துள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்களுக்கு குடிப்பதற்கு கூட நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை என்று சர்வதேச தன்னார்வ நிறுவனமான வாட்டர் எய்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.