லண்டன்: இங்கிலாந்தில் இது மழைகாலம் என்று முன்கூட்டியே தெரிந்தும், உலகக்கோப்பை போட்டித் தொடரை அந்நாட்டில் ஏற்பாடு செய்தது ஏன்? என்று ஐசிசி அமைப்பை நோக்கி கோபக் கேள்விகளை வீசுகின்றனர் ரசிகர்கள்.

உலகக்கோப்பையில் இதுவரை 4 போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஒரு உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகள் ரத்துசெய்யப்படுவது இதுதான் முதல்முறை. இதனால், கடைசியில் புள்ளிகள் பட்டியலில் சில அணிகளின் தலையெழுத்தே மாறிவிட வாய்ப்புள்ளது. ஏனெனில், இலவசப் புள்ளிகள் என்பது திறமையான அணிகளுக்கு கொடுமையானதே!

மேலும், மழையிலிருந்து மைதானத்தை திறமையாக காக்கும் வகையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் செயல்படவில்லை என்ற அதிருப்தியும் நிலவுகிறது. எனவே, இங்கிலாந்தில் இப்படியான ஒரு சூழல் இருந்தும், அங்கே எதற்காக உலகக்கோப்பைத் தொடரை நடத்த ஐசிசி முடிவெடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரும்நாட்களில் ‍‍மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால், இன்னும் எத்தனைப் போட்டிகள் ரத்தாகுமோ? என்ற அச்சமும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ரசிகர்கள் மிக மிக ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் அடக்கம்.