பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் சடுகுடு விளையாட்டுகளில் புழங்கும் பலகோடி அளவிலான பணத்தை செலவழிப்பது யார்? என்ற கேள்வி சாமானிய மக்களின் மனதில் எழுந்தாலும், அதற்கு பதிலளிக்கத்தான் ஆளில்லை.

கடந்த 2018ம் ஆண்டில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கர்நாடக மாநிலத்தில் ஒரே களேபரம்தான். ஒரு பக்கம் பாரதீய ஜனதா மற்றும் இன்னொரு பக்கம் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி.

சட்டமன்ற உறுப்பினர்களை சொகுசுப் பேருந்துகளில் அழைத்துச்சென்று ரிசார்ட்டுகளில் தங்கவைப்பது, தனி விமானங்களில் மும்பைக்கு அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைப்பது மற்றும் திரும்ப அழைத்துவருவது உள்ளிட்ட விஷயங்களில் கோடிக்கணக்கில் செலவாகும் பணம் எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.

ஒவ்வொரு கட்சியினரும் பிறரைக் கைக்காட்டுகிறார்கள். குறைந்தபட்சம் 1 சட்டமன்ற உறுப்பினருக்கு ஒவ்வொரு கட்சியும், இதுபோன்ற நேரங்களில் சுமார் ரூ.20 கோடி வரை செலவு செய்கின்றன என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

சிறப்பு விமானத்தில் பெங்களூரிலிருந்து மும்பைக்கு ஒரு டிரிப் செலவு ரூ.4 லட்சம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவற்கான செலவு ஒரு நாளைக்கு ரூ.4000 முதல் ரூ.11000 வரை என்று பட்டியல் நீள்கிறது.