காவல்துறையினரை ராஜினாமா செய்ய மீண்டும் மிரட்டும் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கம்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநில காவல்துறையினரை ராஜினாமா செய்ய வேண்டும் என மீண்டும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கர வாத இயக்கம் மீண்டும் மிரட்டி உள்ளது.

சமீபத்தில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கர வாத இயக்கத்தினர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.   அதில் மூன்று காவல்துறையினர் படம் மட்டும் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்து தங்கள் ராஜினாமா கடிதத்தை சமூக தளங்களில் வெளியிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.   ஆனால் மூவரும் ராஜினாமா செய்யாததால் அவர்களை கடத்திச் சென்று கொன்று வீசினர்.

இந்த சம்பவம் நாடெங்கும் கடும் பரபரபானது.   பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஹிஜ்புல் முஜாகிதீன் இவ்வாறு செய்ததால் இந்தியா அதிருப்தி  அடைந்தது.   பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க வாஷிங்டனில் இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் அமைதிப்பேச்சு நடத்த உள்ள நேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.   இதனால் இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தையை ரத்து செய்தது.

இந்நிலையில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   அதில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த பட்டியலில் உள்ள அதிகாரிகள் இரு தினங்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும்  இல்லையெனில் விளைவுகளை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவ்வியக்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் அந்த இயக்கம்மிரடல் விடுத்துள்ளது.  ஹிஜ்புல் முஹாகிதின் இயக்கம், “நாங்கள் காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களும் ராஜினாமா செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.  அப்படி இல்லை எனில் எங்கள் துப்பாக்கி குண்டை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.   இந்தியாவுடன் தொடர்புடைய அனைவரையும் நாங்கள் அழிக்க உள்ளோம்” என அரிவித்துள்ளது.