சென்னை:

திமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

“அதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.சின்னசாமி விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, பேரவையின் பணிகளை கவனிக்க புதிய குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவில் கோவை மாவட்ட முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம.ராசு மற்றும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் கா.சங்கரதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொழிற்சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா தொழிற்சங்க வட்டாரத்தில் விசாரித்தோம். “அண்ணா தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை, செயலாளர் ஆர்.சின்னசாமி தலைவர் தாடி ம.ராசு ஆகியோர் தலைமையில் நீண்ட நாட்களாகவே இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சங்க கூட்டங்கள், சிபாரிசுகள் என்று அனைத்திலும் இரு அணிகளுக்கிடையே போட்டி நிலவும். இந்த நிலையில் சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அதில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பெரும்பாலோர் கலந்துகொண்டார்கள்.

“ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான நாமே போராட்டத்தில் கலந்துகொண்டால் நன்றாக இருக்காது. நமது தொழிற்சங்கத்தினரிடம் பேசி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்” என்று தாடி. ம.ராசு தெரிவித்தார்.

ஆனால் சின்னசாமியோ இந்த விவகாரத்தைப் பொருட்படுத்தவே இல்லை. இதையடுத்து கட்சியின் மேலிடத்தினருக்கு சின்னசாமி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. தவிர தாடி.ம.ராசு தரப்பினரும், சின்னசாமி மீது பெரிய புகார் பட்டியலை தயாரித்து மேலிடத்துக்கு அளித்தனர். இதையடுத்தே சின்னசாமி நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கின்றன அண்ணா தொழிற்சங்க வட்டாரம்.

மேலும், “சின்னசாமி முழுக்க தனது கட்டுப்பாட்டில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இருப்பதாக காட்டிக்கொண்டாலும், பெரும்பாலான (அண்ணா தொழிற்சங்க) ஊழியர்கள் அவரது தலைமையை ஏற்கவில்லை என்பதை, சமீபத்திய போராட்டம் வெளிப்படுத்திவிட்டது. இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சின்னசாமி, ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் இருந்தவர். 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி.யுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா, இரண்டு தொகுதிகளை அந்த அமைப்புக்கு அளித்தார். அப்போது சிங்காநல்லூரில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற சின்னசாமி மட்டுமே வெற்றி பெற்றார். பிறகு அவர் அதிமுக.வில் சேர்ந்தார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பொறுப்புக்கும் வந்தார். இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், அடிக்கடி பொறுப்பாளர்களை மாற்றும் ஜெயலலிதா, சின்னசாமி பதவிக்கு பங்கம் ஏற்படுத்தவே இல்லை.

இன்னொரு விசயம்… தற்போது டிடிவி அணிக்கு சென்றவர்களைத் தவிர, வேறு யாரையும் பொறுப்பில் இருந்து நீக்காத ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு, முதன் முறையாக தனது அணியைச் சேர்ந்தவரை நீக்கியிருக்கிறது.