மும்பை

ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் தற்போது தனது ஒயர்லெஸ் சேவையை இன்னும் 30 நாட்களில் மூடப்போவதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் ஏற்கனவே தங்களது டி டி எச் சேவையை நிறுத்திக் கொள்ளபோவதாக அறிவித்தது தெரிந்ததே.  தற்போது அதே குழுமத்தின் மற்றொரு சேவையும் மூடப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.   இந்த நிறுவனக் குழுமத்தின் ஒரு நிறுவனம் இது குறித்து  தங்களது ஊழியர்களிடம் பேசியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தகவலின் படி ஆர் காம் குழுவின் நிர்வாக இயக்குனர் குர்தீப் சிங் “நமது நிறுவனத்தின் ஒயர்லெஸ் சேவையை இனியும் தொடர முடியாத நிலையில் உள்ளோம்.  இன்னும் 30 நாட்களில் இந்த சேவை முடிக்கப்படும்.  உயிருக்குப் போராடும் நோயாளியின் நிலையில் இருக்கும் நோயாளிகளைக் காக்க ஆக்சிஜன் அளிப்பதைப் போல இந்த வர்த்தகத்தை காக்க எங்களாலான அனைத்து முயற்சியும் எடுத்தோம்.  ஆனால் அது பயனளிக்காததால் இந்த வர்த்தகம் இன்னும் 30 நாட்களில் மூடப்படும்” என பேசியதாக ஒரு ஆடியோ ஒரு இணைய செய்தி தளமான  தி எகனாமிக் டைம்ஸ் என்னும் தளத்துக்கு வந்துள்ளது.

அந்த இணைய தளம் இது குறித்து விசாரித்த போது நிறுவனம் எந்த ஒரு தகவலையும் அளிக்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளது.   நஷ்டம் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபடுவதாக தெரிய வந்துள்ளதாகவும் அந்த தளம் தெரிவித்துள்ளது.