p
 
முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தார்.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
அந்தத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் எம்.என். ராஜாவை ஆதரித்து  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று  பிரச்சாரம் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அவர் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
இடையில் செய்தியாளர்களிடம் பேசினார் பியூஷ் கோயல். அப்போது அவர், “ தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில்  பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகள் தேங்கி  அசுத்தமாக இருக்கின்றன.
பல இடங்களில் மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
இத்தொகுதி மக்கள் கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போதும் மாநில அரசு உதவவில்லை.  அப்போது பிரதமர் மோடியும் மத்தி அமைச்சர்களும்தான் ஓடோடி வந்தார்கள்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ நினைத்தும் அதிமுக அரசு ஒத்துழைப்பு தரவில்லை. தமிழக திட்டங்கள் குறித்து பேசுவதற்காக முதல்வரை அணுகியபோதும் சந்திக்க முடியவில்லை. மத்திய அரசு குறைந்த விலையில் எல்இடி விளக்குகள், நிலக்கரி வழங்க முன்வந்தது. ஆனால் அதை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் தமிழக அரசுக்கு ரூ.400 கோடி மிச்சமாயிருக்கும்” என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.