சிசிடிவி காமிரா கண்காணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதி! தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நடைபெற இருக்கும்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுக்க தொகுதி முழுவதும்  சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதற்கிடையில் சசி அணி வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அரசியல் கட்சியினர் புகார் கூறி உள்ளனர். ஒருசில இடங்களில் பணம் கொடுக்கும் சம்பவமும் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது..

அதைத்தொடர்ந்து இந்திய துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா சென்னை வந்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தொகுதியின் முக்கிய சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவும். தொகுதியில் உள்ள 256 ஓட்டுச்சாவடிகளிலும் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினரின்  பணப்பட்டுவாடாவை தடுக்க நகரின் முக்கிய சாலைகள், சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மேலும்,  தேர்தல் கண்காணிப்பில் 5 பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும், இன்றுமுதல்  தேர்தல் முடியும் வரை இரண்டு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

இது தவிர தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த 5 தனிப்படைகள் அமைக்கப் படும் என்று தேர்தல் கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.