சென்னை:

ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த தகவலை உறுதி செய்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேசும், அதிமுக சசி அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும், பாஜக சார்பில் கங்கை அமரனும் போட்டி யிடுகிறார்கள்.

இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக  போட்டியிடுவதாக, வேண்டாமா என்று கூட்டணி தலைவர்களுடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியில்லை என்று நேற்று கூறிவிட்டார். மதிமுக போட்டியிடாது என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு விட்டது. இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணி போட்டியிடுமா அல்லது போட்டியில் இருந்து விலகுமா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் ஸ்டாலினும், டிடிவி தினகரனும், ஒபிஎஸ்சும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் திருமாவன் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்,  ஆர்.கே.நகர் தொகுதியில் மார்க்சிஸ்ட் போட்டியிட ஆர்வமாக உள்ளது என்றும்,  இது குறித்து விரைவில் இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் டாக்டர். வசந்திதேவி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.