அத்வானியை கைது செய்தவருக்கு அமைச்சர் பதவி! ‘மோடி’ அரசியல்

டில்லி,

27 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானியை கைது செய்த கலெக்டருக்கு அமைச்சர் பதவி கொடுத்து மோடி கவுரவப்படுத்தி உள்ளார். இது பா.ஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி பாரதியஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூத்த தலைவர்களான அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா போன்றோர் ஓரங்கப்பட்டனர்.

அதன்பின்னர் தனது நண்பரான அமித்ஷாவை பா.ஜ.வின் தேசிய தலைவராக கொண்டு வந்த மோடி, அவரது ஆதரவாளர்களுக்கு பதவி கொடுத்து கட்சியை தன வசமாக்கினார்.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த புதிய அமைச்ச ரவையில் அதிமுகவை சேர்ந்த இரண்டு பேருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அனிதா தற்கொலை காரணமாக தமிழக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள ஆவேசம் காரணமாக அதிமுக பதவி ஏற்க தயங்கியதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக அந்த பதவி மத்திய அமைச்சர் பொன்னாருக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப் பட்டதாகவும், மேலும் தமிழகத்தை சேர்ந்த நிர்மலாசீதாராமனுக்கு கேபினட் அந்தஸ்தும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  27 ஆண்டுகளுக்கு முன் அத்வானி  ரத யாத்திரையை மேற்கொண்டபோது, பீகார் மாநில கலெக்டராக இருந்தவரும், தற்போது பாரதியஜனதா பீகார் மாநில எம்.பியுமான ஆர்.கே.சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி அளித்து கவுரப்படுத்தி உள்ளார்.

1990ம் ஆண்டு அத்வானியின் ரதயாத்திரையின்போது, அவரையும், பிரமோத் மகாஜனையும் கைது நடவடிக்கை எடுத்ததற்கு பரிசாக ஆர்.கே.சிங்குக்கு அமைச்சர் பதவி அளித்து கவுரப்படுத்தி உள்ளது பாரதியஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.சிங் ஏற்கனவே தேசியஜனதா கூட்டணி ஆட்சியின்போது மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.