கான்பெரா: சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வீரர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் ரசிகர்களால் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது உண்மைதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது; விசாரணை கண்காணிப்பு கேமரா, டிக்கெட் புள்ளி விவரங்கள், போட்டியைக் காண வந்திருந்த மற்ற ரசிகர்களிடம் விசாரணை ஆகியவற்றின் உதவியால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இனவெறிப் பேச்சைப் பேசிய ரசிகர்களைத் தேடி வருகிறோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நீண்டகாலத்துக்குப் போட்டியைக் காண தடை விதிக்கப்படும். இதுதொடர்பாக சம்பவம் நடந்த அன்றே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரப்பட்டது.

நியூசவுத்வேல்ஸ் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விசாரணை முடியும்வரை மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்க இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.