மீ டூ.. கிண்டலடிக்கும் ராதாரவி! கனிமொழி விளக்கம் என்ன?: நெட்டிசன்கள் கேள்வி

மீ டூ இயக்கத்தை கடுமையாக விமர்சித்ததோடு, “கத்திரிக்காய்” இயக்கம் என்று கிண்டலடித்திருக்கும் தி.மு.க. பிரமுகர் ராதாரவியின் பேச்சுக்கு கனிமொழியின் பதில் என்ன என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சமீப காலமாக ட்விட்டர் சமூக வலைதளத்தில்  மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபலமானவர்கள் பலரும்கூட பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் ராதாரவியும் ஒருவர்.

இந்த புகார்கள் குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ராதாரவி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“இயக்குநர்கள் மிகவும் சிரமப்பட்டு இயக்குநர் ஆகிறார்கள். அவர்கலை எதாவது குறை சொல்லி பழிபாவத்துக்கு ஆளாகாதீர்கள். திரைத்துறைக்கும் மீ டூ-வுக்கும் சம்பந்தமே இல்லை.  எந்தவொரு சினிமாக்காரனும் புகார் தராதீர்கள். புகார் அளித்து உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.

முற்போக்காக உள்ள பெண்களே… பிரச்னையை அன்றைக்கே சொன்னால் அன்றைக்கே பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாமே. காலம்கடந்து சொன்னால் எப்படிக் கண்டுபிடிக்கமுடியும்? 10 வருடத்திற்கு முன்பு நடந்ததை இப்போ தேட வேண்டுமே. அப்படித் தான் ஒரு பொண்ணு ஆந்திராவில் சொல்லிச் சொல்லி போரடித்து இங்கு வந்து எல்லோரையும் கையை காட்டுது.

புகார் சொல்பவர்களே.. உங்களுடைய மதிப்பை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதனால் நீங்கள் தரம்தாழ்ந்து கீழே போய்க்கொண்டிருக்கிறீர்கள்.

நடிகைகளுக்கு நடுத்தெருவில் அல்லது ஹாலிலா மேக்கப் போட முடியுமா?  தனி அறையில் தான் மேக்கப் போட முடியும். இயக்குனர் அந்த அறைக்குள் தவறி வந்துவிட்டால் அவர் கதை முடிந்தது. அவர் வந்தார், கிள்ளினார் என்று செய்தி வந்துவிடும். இதெல்லாம் சினிமாவின் வளர்ச்சிக்கு மைனஸ் ஆகிவிடுகிறது

ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிக்கிறார்கள். அந்த ஷாட்டில் அவர் கிள்ளினால் அது ஒரு நியூஸ் ஆகிவிடும். எனக்கு 65 வயதாகிவிட்டது. இப்போதுதா தான் என்னை பற்றியே புகார் சொல்லியிருக்கிறார்கள்.

படப்பிடிப்பின்போது 30, 40 நாட்கள் குக்கிராமத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது யாருடன் பேசுவது. படக்குழுவினர்தான் குடும்பமாக பழகுவோம்.. பேசுவோம். அப்படி இருந்த சினிமா போய் இப்போது எல்லோரும் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.   கதை சொல்லப் போனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து தெருவில் வைத்து சொல்கிறார் இயக்குனர்.

எல்லோருமே  ஒற்றுமையாக இருந்தால் தான் படம் ஓடும். சினிமாவுக்கும், மீ டூவுக்கும் சம்பந்தம் இல்லை. மந்திரிகளுக்கும் மீடூவுக்கும் தான் சம்பந்தம். அது பெரிய இடத்து விவகாரம், நமக்கு எதற்கு அது எல்லாம்? “ என்று பேசிய ராதாரவி, மீ டூ இயக்கத்தை “கத்திரிக்காய் இயக்கம்” என்றும் சாடினார்.

இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். “ராதாரவி நடிகர் மட்டுமல்ல. தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் முக்கிய பிரமுகர். அக்கட்சியின் முக்கிய தலைவரான கனிமொழி, மீ டூ இயக்கத்தை ஆதரித்திருக்கிறார்.

“மீ டூ பிரச்சாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உண்மை இந்த உலகுக்கு சொல்லப்பட வேண்டும். இது பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி. இதை நாம் ஆதரிப்போம். முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்” என்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஆனால் ராதாரவி மீ டூ இயக்கத்தை இழிவாகப் பேசுகிறார். தி.மு.க. பிரமுகர் ராதாரவியின் கருத்துக்கு கனிமொழி விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது ராதாரவி மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.