சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், கொரோனா  தடுப்பு பணிகளை மேற்கொள்ள முன்னாள் மாநகராட்சி ஆணையாளரும், தற்போதைய  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனை தமிழக அரசு  சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்துள்ளது.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த நோடல்  அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடன்,   ஏடிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், அபஸ்குமார், அம்ரேஷ் பூஜாரி, அபய்குமார் ஆகியோரும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது, கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி பேரழிவின்போது நாகப்பட்டினம் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் பணியாற்றியதைத் தொடர்ந்து, அவரை   சென்னை மாநகராட்சி  ஆணையாளர் பதவியில்அமர்த்தினார்.  பின்னர் சுகாதாரத்துறை செயலாளராக பணி மாற்றப்பட்டார்.  ஜெயலலிதாவின்  நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக ராதாகிருஷ்ணன் இருந்து வந்தார்.
ஜெ.மறைவுக்குப் பிறகு  எடப்பாடி அரசால், வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார்.  தற்போது  ராதாகிருஷ்ணனை சென்னை மாநகர கொரோனா தடுப்பு பணியின் சிறப்பு அதிகாரியாக  தமிழக அரசு நியமித்து உள்ளது.
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன்  ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வடக்கு பகுதிக்கும், ஏடிஜிபி அபஸ்குமார் கிழக்குப் பகுதிக்கும், ஏடிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெற்கு பகுதிக்கும், ஏடிஜிபி அபய்குமார்  மேற்கு பகுதிக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  மேலும்,  கடலோர காவல்படை டிஐஜி பவானீஸ்வரியை  சென்னை புறநகர் பகுதிக்கும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பேரிடர் சமயங்களில், அதை கையாளும் திறமைப்பெற்றவர்களில் ராதாகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.