சென்னை:

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  அதற்காக 24 அலுவலகர்கள்  நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 49வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலை யில், வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தலில் போட்டியிட்ட திமுக உறுப்பினர், அப்பாவு, இன்பதுரை வெற்றியை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், ராதாபுரம் தொகுதி வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி  அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த முறையீடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,, நாளை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம்  கூறியது.

இதுகுறித்து கூறிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு,  ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகளும், வாக்குப்பதிவு எந்திரங்களும் நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  சென்னை வந்தடைந்ததும் உயர்நீதிமன்ற பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு  வாக்குகள் டும் எண்ணப்படும் என்றார்.

வாக்கு எண்ணிக்கையில் 24 அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும், தபால் ஓட்டு மற்றும் 19, 20, 21 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி வாகன சோதனையில், மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இருதொகுதிகளுக்கும் தலா 3 கம்பெனி வீதம், மொத்தம் 6 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.