சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறி வரும் ரஜினி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், ரஜினியின் நண்பருமான திருநாவுக்கரசர் எம்.பி. இன்று போயஸ் தோட்டம் சென்று ரஜினியை சந்தித்து பேசினார்…

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவியும் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மிக அரசியலுக்கு வரப்போவதாக கூறிவரும் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5 ஆம் தேதி சென்னையில் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து  ரஜினியைப் பல முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள்  சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், தனது பேரன் பிறந்தநாளையொட்டி மகன், பேரன், மருமகளுடன் சென்று  நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ரஜினியுடன் ராதா ரவி திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.

ஏற்கனவே அதிமுக, திமுகவில் இருந்த ராதாரவி சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.. இந்த நிலையில், ரஜினியை  நடிகர் ராதாரவி  சந்தித்து பேசியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராதாரவி,  ரஜினி ஒரு நல்ல மனிதர். அவரைத் தொந்தரவு பண்ணக் கூடாது. போர் வருதுன்னு ரசிகர்களிடம் சொல்லியிருக்கார். அதைக் கேட்டுட்டு வந்து, அவர் அரசியலுக்கு வர்றார்… அரசியலுக்கு வர்றார்னு சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் வரமாட்டார். அப்படியே வந்தார் அப்பறம் பேசிக்கலாம்  என்று கூறியது குறிப்பிடத்தக்கது.