டில்லி

சிறு குழந்தைகள் தீவிரவாதிகளாக மாறுவதால் அவர்களை இனம் கண்டு திருத்த வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் கூறி உள்ளார்.

டில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தும் சர்வதேச மாநாடான ரைசினா டயலாக் கூட்டம் நடந்து வருகிறது.  இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் ஒருங்கிணைந்த தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளனர்.  அப்போது பிபின் ராவத் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விடை அளித்தார்.

பிபின் ராவத், “நாடெங்கும் தீவிரவாதம் பெருகி வருகிறது.  நாம் இப்போது காஷ்மீரில் அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறோம்.  தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என பலரும் பேசி வருகின்றனர்.  நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்.  எதையும் உடனடியாக அழிக்க முடியாது. முதலில் தீவிரவாதம் எங்கு தொடங்குகிறது என்பதைக் காண வேண்டும்.  அத்துடன் மக்களைத் தீவிரவாதிகளாக யார் மாற்றுகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

இந்த மாற்றம் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில்,  மதக் கூட்டங்களில், நடத்தப்பட்டு வருகிறது.  இதை ஒரு குழுவே நடத்தி வருகிறது.   இவ்வாறு  நடத்துபவர்களை முதலில் தனிமைப் படுத்த வேண்டும். அதன் பிறகு அவர்கள் எந்த அளவுக்கு இந்த நடவடிக்கைகளை நடத்துகின்றனர் என்பதைக் கண்டறிய வேண்டும்.  அந்த அடிப்படையில் இவர்களைத் தரம் பிரிக்க வேண்டும்.   இவர்கள் மேலும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீர் மக்களைச் சிறுவயதில் இருந்தே தீவிரவாதிகளாக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெறுகிறது.   சிறுவர்களும், சிறுமிகளும் 12 வயதில் இருந்தே இவ்வாறு மாற்றப்படுகின்றனர்.   இவ்வாறு மாறத் தொடங்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களை திருத்த வேண்டும்.  அதற்கான முகாம்களில் அவர்களை சேர்க்க வேண்டும்.   முழுமையான தீவிரவாதிகளாக மாறியவர்களை இவர்களிடம் இருந்து படிப்படியாகப் பிரிக்க வேண்டும்.   இவ்வாறு தீவிரவாதிகளை திருத்தும் முகாம்களை நாடெங்கும் தொடங்க வேண்டும்.

இதைப் பாகிஸ்தானும் செய்து வருகிறது.  தீவிரவாதிகளை ஆதரிப்பது தவறு என்பதை அந்நாடு இப்போது புரிந்துக் கொண்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.