நொய்டா

திறந்த கழிவுநீர் குட்டையில் கார் விழுந்ததால் ரேடியோ மிர்ச்சியின் பெண் அதிகாரி பரிதாபமாக மரணம் அடைந்தார்.

எஃப் எம் ரேடியோக்களில் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற ரேடியோக்களில் ரேடியோ மிர்ச்சியும் ஒன்றாகும்.    இந்த ரேடியோ மிர்ச்சியின் நொய்டா கிளையில் குழு மேலாளராக பணி புரிபவர் தானியா கன்னா.  இருபத்தெட்டு வயதாகும் தானியா காசியாபாத்தில் உள்ள கவி நகரில் வசித்து வருகிறார்.   இவர் நேற்று முன்தினம் ரேடியோ மிர்ச்சியின் குருகிராம் அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.  அங்கு அலுவலை முடித்துக் கொண்டு இரவு தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர் வந்துக் கொண்டிருந்த சாலையில் தெரு விளக்குகள் எரியவே இல்லை.   எனவே பாதையில் உள்ள வளைவை காரை ஓட்டிக்கொண்டிருந்த தானியாவால் கவனிக்க இயலவில்லை.   அந்த சாலை வளைவில் ஐந்தடி ஆழமுள்ள ஒரு திறந்த கழிவுநீர்க் குட்டை இருந்துள்ளது.  கார் அந்தக் குட்டையில் விழுந்து முன் கண்ணாடிகள் உடைந்தன.

உடைந்த கண்ணாடி வழியாக நீர் உள்ளே புகுந்தது.   பாதுகாப்புக் காரணமாக காரின் கதவுகள் தானே பூட்டிக் கொள்ளும் வசதியுடன் இருந்ததால் தானியாவால் வெளியே வர முடியவில்லை.   அவர் நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.  இதனால் அவர் குடும்பத்தினர் மிகவும் துக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தானியாவின் தம்பி குணால், “என் அக்காவின் மரணத்துக்கு மாநகராட்சியின் அலட்சியப் போக்கே காரணம்.  அவ்வளவு பெரிய கழிவு நீர்க் குட்டையை மூடாமல் வைத்துள்ளனர்.   மேலும் அந்த நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் கிடையாது.    தனிமையாக இருக்கும் அந்த சாலையில் எது நடந்தாலும் யாருக்கும் தெரியாது.   அத்துடன் கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் படவில்லை” எனக் கூறி உள்ளார்.

இந்த விபத்துக்குப் பின் கழிவு நீர்க் குட்டை மூடப்பட்டுள்ளது

விபத்து நடந்த இடத்தின் அருகில் வசிக்கும் வசந்த் என்பவர், “இந்த சாலையில் தெரு விளக்குகள் இல்லாதது குறித்து பலமுறை மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.   சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்த கழிவு நீர் குட்டை தூரத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு தெரியாது.  இதற்காக எச்சரிக்கை பலகையும் பொருத்தப்படவில்லை.

இந்த விபத்து நடந்து சில மணி நேரங்களுக்குப் பின் தான் நாங்கள் இந்தக் காரை பார்த்தோம்.  உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து அவர்கள் காரையும் அதில் இருந்த பெண்ணையும் வெளிக் கொணர்ந்தனர்.   அந்தப் பெண் அப்போதே இறந்திருந்தார்.” எனக் கூறி உள்ளார்.

.