ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு  தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது , ஒப்பந்தம்  தொடர்பான தகவல்களை  தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு  உத்தரவிட்டது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்த முறைகேடு குறித்து  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி  வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக எந்வொரு கருத்தையும் தெரிவிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஃபேல்  ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  எம்எல் சர்மா, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக  வாதாடினார்.

ஆனால் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை என்றும், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு வழக்கறிஞர்  எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஒப்பந்தத்தில் ரஃபேல் நிறுவனம் இறுதி செய்யப்பட்டது எப்படி? என்றும், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு விளக்க அறிக்கை  சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இநத வழக்கு   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்கே கௌல் மற்றும் நீதிபதி கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது.