ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்து விசாரிக்க கோரி திங்கட்கிழமை தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை (10ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

ரஃபேர் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் பெருமளவு முறைகேடு நடைபெற்றிருப்பதாக வும், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின்  நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாய் அளவு லாபம் அடைந்துள்ள தாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த முறைகேடு குறித்து  நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக எந்வொரு கருத்தையும் தெரிவிக்க பாஜகவும், பிரதமர் மோடியும் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஃபேல்  ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள், காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலை உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வினீத் தன்டா என்பவர் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்கே கௌல் மற்றும் நீதிபதி கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் விசாரணை 10ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தனர்.