Rafael Nadal won the Monte Carlo Masters for a record-breaking 10th time

 

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி கோப்பை வென்றது. மொனாகோவின் மான்டி கார்லோ நகரில் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், 4ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், சக நாட்டவரான ஆல்பர்ட் ராமோஸ் வினோலாசை எதிர்த்து விளையாடினார். முதல் முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ராமோஸ், நடாலின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்.

இதனால், நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ராமோசை மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றார். மான்டி கார்லோ தொடரில் நடால் வெல்லும் 10வது பட்டம் இது. ஒட்டுமொத்தமாக இவர் வெல்லும் 70வதுபட்டம் இது. இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பப்லோ கியூவஸ் ஜோடி, ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், மார்க் லோபஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 10-4 என்ற செட்களில் போராடி வென்று கோப்பையை கைப்பற்றியது.