ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் வெளியானது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்: உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு பதில் மனு

டில்லி:

ஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் வெளியானது தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஃபேல் போர் விமான ஒப்பந்தம்  தொடர்பான மேல்முறையீடு வழக்கு கடந்த 6ந்தேதி முதல் உச்ச நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ம் ஆண்டு  பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம்  இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டது. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையில்  ரஃபேல் ஒப்பந்தம்  தொடர்பான  ஆதாரங்கள் பத்திரிகைகளில் வெளியான நிலையில்,  ரஃபேல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, ரஃபேல் ஆவணங்கள் திருட்டு போனதாக உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு குற்றம்சாட்டியது. ஆவனங்களை வெளி யிட்ட இந்து பத்திரிகை மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படும் என மிரட்டியது. பின்னர், ஆவனங்களின் நகல்கள் எடுக்கப்பட்டுள்ள என்று, அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் மாற்றி பேசினார். இது பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில் ரஃபேல் மேல்முறை யீடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்தியஅரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரஃபேல் ஒப்பந்த வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்று அச்சம் தெரிவித்து உள்ளது.

இன்றைய விசாரணையின்போது, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா உச்சநீதி மன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  மனுதாரர்கள் தாக்கல் செய்திருப்பது,  தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணங்கள் அனைத்தும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல்  நகல் எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  அதை மறுஆய்வு மனுக்களோடு தாக்கல் செய்ததன் மூலம், அவர்கள் ஆவணங்களை திருடி இருப்பது தெரிய வருகிறது. இது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வெளிநாடு களுடனான நட்புறவை பாதித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ரஃபேல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களில் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரகசியம் காக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த ஆவணங்களை நகல் எடுத்து வெளியிட்டிருப்பது,  தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கும்… இது வெளியிடப்பட்டது  குற்றமாகும். ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் (பிப்ரவரி)  28-ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன்,  இந்த தகவல்கள் எங்கிருந்து  வெளியானது என்பதையும் மத்திய அரசு கண்டறிய வேண்டும். அதன்மூலம், வருங்காலத்தில் அரசு நடவடிக்கைகளின் புனிதத் தன்மை பேணி காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.