ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும்: டில்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி:

ரஃபேல் பேரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும் என டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.


ரஃபேல் பேரம் தொடர்பாக பிரான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட இந்திய பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிந்தபோதே, பிரதமர் அலுவலகத்திலிருந்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக ‘தி இந்து’நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த செய்தியை மேற்கோள்காட்டி, ரஃபேல் பேரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.

என் வீட்டிலும்,அலுவலகத்திலும் ரெய்டு செய்தது போலவும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டில் ரெய்டு செய்தது போலவும், பிரதமர் மோடி அலுவலகத்திலும் ரெய்டு நடத்தி ஆவணங்களை சிபிஐ கைப்பற்ற வேண்டும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருக்கிறார். அதேபோல், சிபிஐ இயக்குனருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.

அதில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரும் இழப்பு ஏற்படுத்தியதில் பிரதமர் அலுவலகத்துக்கும் பங்கு உள்ளது. புகாரை பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒரு மனுதாரராக இருக்கும் சஞ்சய் சிங், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மையை தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தினர் சாட்சிகளை அழிக்கக் கூடும் என்பதால், விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.