ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: சிஏஜி விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை
டில்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் (மத்திய கணக்கு தணிக்கை வாரியம்) காங்கிரஸ் இன்று மனு அளிக்கிறது.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட உள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல கோடி ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் குற்றம் சாட்டி வருகிறது.
2012-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.560 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதும், 2016-ம் ஆண்டில் ரூ.560 கோடி என்பது ரூ.1,600 கோடியாக அதிகரித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
அதன் காரணமாகவே போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான போர் விமானங்களை கொள்முதல் செய்வதில், அரசின் கொள்கையை மீறி இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பாக வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகங்களை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ்- பாரதீய ஜனதா இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய தணிக்கை வாரியத்திடம் (சிஏஜி) இன்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.