டில்லி:

ஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு  தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவித்திருந்த நிலை யில், இன்றைய விசாரணையை தொடர்ந்து வழக்கு 10ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த விசாரணைகளின்போது, ஆவணங்கள் திருடுபோனதாக தெரிவித்த மத்திய அரசு பின்பு, ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டதாக பல்டி அடித்தது.

இதற்கிடையில், ஆவணங்களின் நகல் செய்தி பத்திரிகையில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  ஆவனங்களை வெளியிட்ட இந்து பத்திரிகை மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியது.  அப்போது மத்தியஅரசு சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்,  ரஃபேல்  விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங் கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு  பெற கூடியவை அல்ல என்று அவர் கூறினார். மனுதாரர்கள், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

ஆனால், மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் 6ந்தேதி முதல் விசாரணை நடைபெறும் என அறிவித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 10ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையில்,  ரஃபேல் சீராய்வு மனுக்களை  உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றதன் மூலம் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாஜக எம்.பி. மீனாட்சி லேகி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கையும், ரஃபேல் மேல்முறையீடு  வழக்குடன் சேர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.