அரசியலுக்கு வருவேன்! :  லாரன்ஸ் அதிரடி !
அரசியலுக்கு வருவேன்! :  லாரன்ஸ் அதிரடி !

சென்னை:

“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மனைவியின் நகைகளை அடகு வைத்து சோறு போட்டேன்” என்றும், “ தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன்” என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி எந்த தலைமையும் இல்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைதியான போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்க வந்த சில அரசியல்வாதிகளை மாணவர்கள் அனுமதிக்கவில்லை. நடிகர்களும் வர வேண்டாம் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே நேரம், போராட்டத்தில் பங்கு பெற நடிகர் லாரன்ஸ் உள்ளிட்ட சிலரை மட்டும் அவர்கள் அனுமதித்தனர். அவர் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார் என்பதால் ஏற்றுக்கொண்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், “ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கலவரத்தின் போது  இளைஞர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

“போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு என் மனைவியின் நகைகளை அடகு வைத்து, சோறு போட்டேன்” என்ற அவர், “தற்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன். இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் தேர்தலில் நிற்போம்” என்றார்.

மேலும், “அரசியலுக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.