பிறந்த நாள் கொண்டாட்டத்தை துறந்த ராகவா லாரன்ஸ்…!

திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 82 மணி நேர முயற்சிக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார் .

சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது .
சுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் சுஜித் மறைவு தொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.

இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி