இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும் : ரகுராம் ராஜன்

--

டில்லி

துவரை இல்லாத அளவுக்கு அடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாரக்கடன் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.  இவர் 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்.  தேசிய கவுன்சில் நடத்திய இந்த மாநாட்டில் காணொளி மூலம் கலந்துக் கொண்ட ரகுராம் ராஜன் உரையாற்றினார்.

ரகுராம் ராஜன் தனது உரையில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த தேசிய ஊரடங்கு நடவடிக்கையால் ஏராளமான தொழில் நிறுவனங்கள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் பெரும் சிக்கலிலும், பொருளாதார நெருக்கடியிலும் உள்ளன.  இதனால் இவை  வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இதனால் இப்போதிலிருந்து அடுத்த 6 மாதங்களில் வங்கிகளில் வாராக் கடன் அளவு இதுவரை கண்டிராத அளவு மோசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.  தற்போது நாம் மிகவும் மோசமான சூழலில் இருக்கிறோம்,  எனவே பிரச்சினையின் தீவிரத்தை அடையாளம் கண்டு விரைவாக நடவடிக்கை எடுப்பது நன்மை அளிக்கும்.

நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜன்தன் வங்கிக் கணக்கின் மூலம் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது என தெரிவித்து ஜன்தன் வங்கிக்கணக்கின் வெற்றியைப் பெருமிதம் கொண்டுள்ளார்.   உண்மையில் பொருளாதார வல்லுநர்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கின் வெற்றி மீது பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

உதவி சென்று சேர வேண்டி அந்த குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கு மூலம் நிதியுதவி சென்றுசேர்வதில் பெரும் சிக்கல் உள்ளது. இப்போதும் உலகளாவிய தன்மை குறித்துத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நமக்கு இலக்கு இல்லை. ஜன் தன் வங்கிக்கணக்கு திட்டம் விளம்பரப்படுத்தும் அளவுக்கு போதுமான அளவு வேலை செய்யவில்லை என்பதாகும்.

தற்போது இந்தியப் பொருளாதாரத்தில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் வேளாண்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவது மட்டும்தான். அரசு வேளாண் துறையைச் சீரமைக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இச்சீர்திருத்தங்கள் நீண்டகாலத்துக்குப் பேசப்பட வேண்டும். இவற்றை சரியாக நடைமுறைப்படுத்தினால், பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிட்ட பகுதியினருக்கு உறுதியாக நல்ல பலன் கிடைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.