இங்கிலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் ரகுராம் ராஜன் முதலிடம்

ண்டன்

பாரத ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திலாந்து வங்கி ஆளுநர் தேர்வு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

பாரத ரிசர்வ் வங்கி ஆளுநராக 2013 ஆம் வருடம் முதல் பதவி வகித்த ரகுராம் ராஜன் பாஜக அரசிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.  தற்போது அவர் சிகாகோவில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.    அத்துடன் பொருளாதாரம் குறித்த புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.

சென்ற வருடம் ரகுராம் ராஜன் லண்டனில் செய்தியாளர்களிடம், “நான் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிவதையே பெருமையாக கருதுகிறேன்.  நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர்.   வங்கி அதிகாரி அல்ல.   நான் இருக்கும் இடத்தில் மிகவும் மகிழ்வுடன் உள்ளேன்” என தெரிவித்தார்.   ஆனால் வங்கிகள் அவரை விடுவதாக இல்லை.

வரும் வருட தொடக்கத்தில் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் மார்க் கார்னியின் பதவிக் காலம் முடிவடைகிறது.   அந்த பதவிக்காக பல உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களின் பட்டியலை வங்கி நிர்வாகம் தயாரித்துள்ளது.   இதில் முதல் இடத்தில் ரகுராம் ராஜனின் பெயர் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இங்கிலாந்து வங்கியின் தற்போதைய ஆளுநர் மார்க் கார்னி இவ்வங்கியின் முதல் வெளிநாட்டை சேர்ந்த ஆளுநர் ஆவார்.   இவர் கடந்த 2013 ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார்.  இவர் பதவிக்காலம் வரும் 2020 ஆண்டு ஜனவரி மாதம் 31 உடன் முடிவடைய உள்ளது.