சிகாகோ

ந்தியாவின் 7.5% பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியாது என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்தவர் ரகுராம் ராஜன்.   இவரது பொருளாதார ஆய்வுக் கருத்துக்களுக்கு உலகெங்கும் மதிப்பு உள்ளது.   ரிசர்வ் வங்கி ஆளுனர் பதவியை ராஜினாமா செய்த பின் தற்போது சிகாகோ பல்கலைக் கழகத்தின் கீழுள்ள பூத் வர்த்தக கல்வி நிறுவனத்தின் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து ஒரு பேட்டியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.   அந்தப் பேட்டியில், “இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியான 7.5% மிகவும் குறைவானதாகும்.    தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு அற்று இருக்கும் 1.2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இந்த வளர்ச்சி போதாது.   எனவே இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 10% அளவுக்கு அதிகரித்தாக வேண்டும்

அதே நேரத்தில் இந்த வளர்ச்சி எதிர்ப்பார்ப்பதை விட குறைவான வேகத்திலேயே அமையும்.   தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதுதான் சாத்தியமான ஒன்றாகும்.   ஆனால் நாம் அந்த வேகத்தை அதிகரிக்க கடுமையாக உழைத்தாக வேண்டும்.    அதற்கு இளைஞர் சமுதாயம் ஒத்துழைக்க வேண்டும்.  அதற்கு உற்பத்தி துறையில் கவனம் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் உற்பத்தி துறைக்கு சமமாக ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த வேண்டும்.   ஒரே நாளில் நாம் பல பொருட்களை உற்பத்தி செய்கிறோம் என வைத்துக் கொள்வோம்,  ஆனால் அதை வாங்க ஆட்கள் வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  சீனாவைப் போல அல்லாமல் நாம் வேறு வழியில் முன்னேற்றத்தைக் காண வேண்டும்”  என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.