கர்நாடகா: 15 நிமிடத்தில் 7 களி உருண்டை சாப்பிட்டு வெற்றி பெற்றவருக்கு பரிசு
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் மங்களா கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாட்டு கோழி குழம்புடன் கேழ்வரகு களி உருண்டை சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் ஸ்ரீரங்கப்பட்னா அரகிரே கிராமத்தை சேர்ந்த மிஸ்ஸி எரேகவுடா (வயது 54) என்பவர் வெற்றி பெற்றார். இவர் 15 நிமிடத்தில் 7 களி உருண்டைகளை சாப்பிட்டார். இதன் மொத்த எடை மூன்றரை கிலோ ஆகும்.
இவருக்கு வெற்றிக்கான கோப்பையும், ரூ.5 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. இவர் இந்த போட்டியில் 9வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று களி உருண்டை சாப்பிடும் பல போட்டிகளில் இவர் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் என்பவர் 5.75 களி உருண்டை (2.75 கிலோ) சாப்பிட்டு 2ம் பிடித்தார். இவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
அடுத்து ராமமூர்த்தி என்பவர் 2.5 கிலோ எடை கொண்ட களி உருண்டைகளை சாப்பிட்டு 3ம் இடம் பிடித்தார். இவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. நந்திஷ், காராசவாடி சங்கரே கவுடா, யோகேஷ், நாகேஷ் ஆகியோர் தலா 5 உருண்டைகள் சாப்பிட்டனர். ஆனால், 15 நிமிடங்களுக்கு மேல் இவர்கள் எடுத்துக் கொண்டனர்.
எனினும் இவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மொத்தம் 65 பேர் கலந்துகொண்டனர். சித்தகலேஹல்லா கிராமத்தை சேர்ந்த ஜெயம்மா என்ற ஒரு பெண் மட்டும் கலந்துகொண்டு 2 உருண்டைகள் சாப்பிட்டார்.