டில்லி,

நாடு முழுவதும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி குரல் கொடுக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான திட்டம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மோடி தலைமையிலான ஆட்சி பதவியேற்றபிறகு, நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி,   பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி மத்திய அரசுக்கு எதிராக களத்தில் குதிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்கும் விதத்தில், விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மராட்டியம் மாநிலங்களில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ள மாநிலங்களிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

ஏற்கனவே டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களோடு அமர்ந்து தனது ஆதரவை ராகுல்காந்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.