ஆஸ்திரேலியாவில், இந்திய அணிக்கு தற்காலிக கேப்டனாக செயல்பட்டு, வெற்றியை ஈட்டித்தந்த ரஹானே, ஒரு நல்ல கேப்டன் என்பதோடு, நல்ல மனிதர் என்ற பெயரையும் சம்பாதித்து வருகிறார்.

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பின்னர், வெற்றிக்கோப்பை தனக்கு வழங்கப்பட்டவுடன், இந்திய அணியின் புதுமுக டெஸ்ட் வீரர் நடராஜனை அழைத்து, கோப்பையை அவரின் கையில் கொடுத்தார். கோப்பையுடன் கூடிய குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, சாதாரணமாக, ஒரு ஓரத்தில் முட்டிப்போட்டு அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்தார்.

மேலும், அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை செய்த காரணத்தாலேயே, தான் சிறந்த கேப்டனாக தெரிவதாக பணிவுடன் கருத்து தெரிவித்தார். இவர், எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை, இவர் தலைமையேற்ற 5 டெஸ்ட் போட்டிகளில், 4 வெற்றி மற்றும் 1 டிரா என்று, தோல்வியையே சந்திக்காத ஒரு கேப்டனாக இவர் மிளிர்கிறார்.

இந்நிலையில், இவர் செய்த மற்றொரு செயல், பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு 100வது போட்டியாகும். எனவே, அவரை கெளரவிக்க நினைத்தார் ரஹானே.

ஒரு கேப்டன் என்ற முறையில், தான் கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சியை, நாதன் லயனுக்குப் பரிசாக வழங்கி, 100 போட்டிகள் ஆடிய வீரர் என்பதற்காக கெளரவித்தார். இந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது.