அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், எப்படி இருக்கும் என்பதை இந்திய துணைக் க‍ேப்டன் ரஹானே கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “4வது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்தில் பெரிதாக மாற்றம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் எவ்வாறு இருந்ததோ, அதேபோன்றுதான் 4வது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையில் 3வது டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டதுதான் போட்டியின் தன்மையை மாற்றியது. வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிட்டால், பிங்க் பந்து ஆடுகத்திளத்தில் பட்டவுடன் வேகமாக வரும். இதை நாம்தான் சரிசெய்ய வேண்டும். ஆதலால், கடந்த இரு போட்டிகளுக்கு இருந்ததைப்போலவே ஆடுகளம் இருக்கும் என நம்புகிறேன்.

ஆனால், எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பது மட்டும் எனக்குத் தெரியாது; பொறுத்திருந்து பார்க்கலாம். இங்கிலாந்து அணியை மதிக்கிறோம். சிறந்த வீரர்கள், சரிவிகிதத்தில் அணி வீரர்களாக உள்ளனர். கடந்த 2 போட்டிகளாக நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.

இங்கிலாந்து அணியில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் அவர்களை அடுத்தடுத்த போட்டியில் எளிதாக நாங்கள் எடுக்கவில்லை. இங்கிலாந்தும் இந்தத் தொடரை வெல்லவே எங்களுக்கு கடும் போட்டியளிக்கிறார்கள்.

டிஆர்எஸ் முறையில் பேட்ஸ்மேன்கள் அனுகும்முறை மாறிவிட்டது என நான் நினைக்கவில்லை. அனைத்தும் மனதைப் பொறுத்தது. டிஆர்எஸ் முறை உண்மையில் அனைத்து அணிகளுக்கும் உதவுகிறது.

சந்தேகத்துக்கிடமான முடிவுகளைப் பரிசீலனை செய்யலாம். உங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தலாம். பிங்க் பந்தில் விளையாடுவதற்கும், சிவப்புப் பந்தில் விளையாடுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. பிங்க் பந்து திடீரென எழும்பும். ஆனால், சிவப்பு பந்து வரும் வேகத்தில் மாற்றம் இருக்கும். நாங்கள் பிங்க் பந்தில் அதிகமாக விளையாடியது இல்லை.

இது எங்களுக்கு 3வது போட்டி என்பதால், இன்னும் அதிகமான அனுபவம் அவசியம். ஸ்பின்னர்களுக்கு உகந்த ஆடுகளத்தில் விளையாடும்போது, லைன் & லென்த் மிகவும் அவசியம்” என்றார் ரஹானே.