ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், அதனால் தனது செயல்திறன் எதுவும் பாதித்துவிடவில்லை என்பதை நிரூபித்துள்ளார் ரஹ்மத் ஷா.

ஆம். இதற்கு முன்பாக ஆஃப்கன் அணிக்கான முதல் டெஸ்ட் அரை சதத்தைப் பதிவு செய்திருந்த அவர், தற்போது தனது அணிக்காக முதல் முழு சதத்தையும் அடித்து அந்த அணியில் முதல் டெஸ்ட் அரை சதம் மற்றும் முழு சதம் அடித்தவர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

இந்த சாதனைகள் தவிர, ஆஃப்கன் அணிக்காக இவர் வேறு பல முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பையும் அளித்துள்ளார். அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின்போது 98 ரன்களுக்கு அவுட்டானார். ஆனால், தற்போது வங்கதேசத்திற்கு எதிராக வெற்றிகரமாக சதத்தை கடந்து சாதனை புரிந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் அணிக்கான அவரின் பங்களிப்பு மெச்சத்தகுந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அவர் 50க்கும் மேற்பட்ட ரன்களை இதுவரை மொத்தம் 21 முறை அடித்துள்ளார். அதில் ஆஃப்கன் அணி 16 முறை ஆஃப்கன் அணி வென்றுள்ளது.
அவர் அடித்த 98 மற்றும் 76 ரன்கள் அயர்லாந்து அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் முதல் வெற்றிபெற காரணமாக இருந்தது.

ஆசியா கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இவர் அடித்த 72 ரன்கள் அணியின் வெற்றிக்கு உதவியது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இவர் அரைசதங்கள் அடித்தார். மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராகவும் இவரின் பங்களிப்பு பிரமாதமாக இருந்தது.