3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி

ராய்ப்பூர்:
மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று சத்தீஸ்கரின் இருபதாவது அறக்கட்டளை விழா நடைபெற்றது, அதில் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கலந்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது: விவசாயிகள் தங்களுடைய நலன்கள் புறக்கணிக்கப்பட்டதால் தற்போது மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். வேளாண் துறையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய விவசாய மசோதாக்களை, பிரதமர் நரேந்திர மோடி மறுபரிசீலனை செய்து அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அமைப்பிலும் சிறிய குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அதற்காக அந்த அமைப்பை முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும் என்று அர்த்தமில்லை, விவசாயிகள் நலனுக்கு ஏற்ப அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் போதும் என்று தெரிவித்தார்.

மேலும் பிஹார் மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு மண்டி முறை அகற்றப்பட்டதிலிருந்து விவசாயிகளின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது, மத்திய அரசின் இந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக நாம் அனைவரும் போராடி வருகிறோம், மத்திய அரசின் இந்த சட்டங்கள் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில், எதிர்க்கபட்டுள்ளன. ஆனால் தற்போது இந்த மூன்று விவசாய சட்டங்களையும் மறுபரிசீலனை செய்து அதனை மேம்படுத்துமாறு நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதும், விவசாயிகளின் அவல நிலையும் நாம் அனைவரும் அறிந்த உண்மையே. விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் அவர்களுக்காக பாடுபட வேண்டும் அப்போது தான் நாடும் செழிக்கும். விவசாயிகளும் தொழிலாளர்களும் கிராமத்தின் அடித்தளமாக உள்ளனர், விவசாயிகளும் தொழிலாளர்களும் பலவீனமாக இருந்தால் நம் நாடு முழுவதும் பலவீனமாகிவிடும். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பது நம் நாட்டை பாதுகாப்பதுடன், நாட்டின் அஸ்திவாரத்தை வலுப்படுத்தி பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று தனது உரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.