இது அரசியல் சந்திப்பு – கூட்டணி சந்திப்பு இல்லை : கமலஹாசன்

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த கமலஹாசன் கூட்டணி குறித்து பேசவில்லை என கூறி உள்ளார்.

நடிகர் கமலஹாசன் தாம் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவு குறித்து டில்லி சென்றுள்ளார்.   அவர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.   ஆனால் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் கமலஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளார்.

டில்லியில் துக்ளக் சாலையில் அமைந்துள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு குறித்து அரசியல் உலகில் பல ஊகங்கள் கிளம்பின.  குறிப்பாக தமிழக அரசியல் நோக்கர்கள் இந்த சந்திப்பை கூர்மையாக கவனித்து வந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து கமலஹாசன், “இந்த சந்திப்பில் நாங்கள் அரசியலைக் குறித்து பேசினோம்.  ஆனால் நீங்கள் எதிர்பார்த்த அரசியல் அல்ல.  தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் நிலை குறித்துப் பேசினோம்.   கூட்டணி குறித்து பேசவில்லை” என அறிவித்துள்ளார்.