ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு மீரட் நகரில் நுழைய அனுமதி மறுப்பு

க்னோ

குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தோர் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை மீரட் நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  இதில் வன்முறை வெடித்ததில் சுமார் 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.  குறிப்பாக மீரட்டில்  5 பேர் வன்முறைக்குப் பலி ஆகி உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னொர் பகுதிக்குச் சென்றார்.  அங்கு அவர் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறையில் மரணம் அடைந்தோர் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் அளித்தார்.    அதன் பிறகு அவர் மீரட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார்.

அதையொட்டி மீரட் நகருக்குப் பிரியங்கா காந்தி தனது சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் காரில் சென்றார்.  வழியில் அவர்கள் சென்ற காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  தற்போது மீரட்டில் 144 தடை உத்தரவு உள்ளதால் அவர்கள் இருவரும் மீரட் நகருக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதையொட்டி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீரட் நகருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   இருவரும் மரணமடைந்தோர் குடும்பத்தை சந்திக்க முடியாத நிலையில் டில்லிக்குத் திரும்பி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி