பாஜ ஆளும் உ.பி. பல்கலை மதிப்பெண் சான்றிதழில் ராகுல், சல்மான் படம்!

ஆக்ரா,

உ.பி.மாநிலத்தில் ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகர்கள், அரசியல் தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை இது காட்டுகிறது என எதிர்க்கட்சியினர் கூறி உள்ளனர்.

உ.பி.யில் பாரதியஜனதாஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், மாணவர்களின் புகைப்படம் இடம்பெறுவதற்கு பதிலாக அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி, பாலிவுட் நடிகர் சல்மான்கான், ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

மேலும் மாணவர்களின் பெயர்களிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவரின் பெயரை பீமாராவ் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த  சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். யோகியின் திறமையின்மை காரணமாக இதுபோன்ற தவறுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விரைவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed