திருப்பதியில் மோடி அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருப்பதி:

கடந்த தேர்தலில் திருப்பதிக்கு வந்த மோடி அளித்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.


திருப்பதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு கூட்டாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு மன்மோகன்சிங் வாக்குறுதி அளித்தார். இந்த முக்கியமான வாக்குறுதியை பிரதமர் மோடி ஏன் புறக்கணித்தார் ?

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். அதில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவான வருவாய் உள்ளிட்டவை அடங்கும்.

இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை. ஆந்திர மக்களின் கனவை நிறைவேற்றுவோம்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உறுதியாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.