டில்லி

ஆர் எஸ் எஸ் தலைவர் ராணுவத்தை குறை கூறியதாக சொல்லி அவருக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் நகரில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.  அப்போது அவர், ” ஆர் எஸ் எஸ் நினைத்தால் எதிரியுடன் போரிட ஒரு சக்தி வாய்ந்த ராணுவத்தை விரைவில் உருவாக்க முடியும்.   ராணுவம் போரிடத் தயாராக ஆறிலிருந்து 7 மாதங்கள் தேவைப்படும்.   ஆனால் ஆர் எஸ் எஸ் இயக்கத்துக்கு போரிடத் தயாராக இரண்டு அல்லது மூன்று தினங்கள் போதுமானது”  என தெரிவித்தார்.

மோகன் பகவத் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “மோகன் பகவதின் பேச்சு ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது.    நாட்டுக்காக தியாக செய்யும் ராணுவத்தினரையும்,  உயிர் இழந்த வீரர்களையும் அவமரியாதை செய்யும் வகையில் இந்த பேச்சு உள்ளது.   இதற்காக மோகன் பகவத் மன்னிப்பு கேட்க வேண்டும்”  என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இதனிடையே ஆர் எஸ் எஸ் இது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளது.  அதில் “மோகன் பகவத் ராணுவத்தையும் ஆர் எஸ் எஸ்சையும் ஒப்பிடவில்லை.  அவர் கூறியதன் பொருள் இது தான் : போர் என்று வந்தால் ராணுவம் அதற்கு ஏற்ப மக்களை தயார் படுத்த வேண்டும், அதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகலாம்.  ஆனால் ஆர்எஸ்எஸ் போர் என்று வந்தால் 3 நாட்களில் தயாராகி விடும். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறது என்று  மோகன் பகவத்  கூறியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளனர்.”  என கூறப்பட்டுள்ளது.