நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்யும் ராகுல்காந்தி, கருங்கல் அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம்  மீனவர்களுடன் கலந்துரையாட காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால்,  பிரதமர் மோடிக்கு எதிராக மீனவர்கள் கடலில் இறங்கி கோஷம் போட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தென்மாவட்டங்களில் 3 தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் கடைசி நாளான இன்று  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் இன்று காலை குமரிக்கு வந்த ராகுலுக்கு பிரமாண்டமான  முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்,  அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த குமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து,  நாகர்கோவில் டெரிக் ஜங்சனில் மக்கள் சந்திது உரையாற்றிய ராகுல், பின்னர் தக்கலைக்கு சென்றார். அங்கு காமராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், மக்களிடையே உரையாற்றினார். அப்போது, காமராஜரின் பெருமைப்படுத்தியவர், அவர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை புகழ்ந்தார்.

பின்னர் முளகுமூடு பகுதியில்  மாணாக்கர்களுடன் கலந்துரையாடியதுடன், குளச்சல் பேருந்து நிலையம் அருகே மக்களிடையே உரையாற்றினார்.

தொடர்ந்து மாலை 4 மணி அளவில் கருங்கல் ஜங்ஷனில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று அவர்களுடன் பேசிய ராகுல், பின்னர்,தேங்காய்ப்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்களின் படகுதளம் சென்றார்.

அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேங்காய்ப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு சென்று மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.