சச்சினுக்கு முன் ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் டிராவிட் இடம் பெற்றதற்கான காரணம் இதோ…

இந்தியக் கிரிக்கெட் போட்டியில் மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பெயர் ஹால் ஆஃப் பேமில் இடம் பெறாத நிலையில், டிராவிட் பெயர் இடம் பெற்றது எவ்வாறு என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

rahul

‘ ஹால் ஆப் ஃபேம் ‘ என்பது ஐசிசி அமைப்பின் ஒரு உயர்ந்த பட்டமாகும். கிரிக்கெட் விளையாட்டிற்கு பல்வேறு பங்களிப்புகள், சாதனைகள் புரிந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பட்டியலில் கவுரவிக்கப்படுகிறார்கள். இது பட்டமாக இல்லாவிட்டாலும்கூட ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் வீரர்கள் இணைவது மிகப்பெரிய மரியாதையாகச் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இதுவரை பிஷன்சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அனில் கும்ப்ளே உள்ளிட்ட 4 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றனர். தற்போது 5-வது வீரராக இந்திய அணியின் தூண் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணைந்த 5-வது இந்திய வீரர் எனும் பெருமையை டிராவிட் பெற்றார்.

ராகுல் டிராவிட் பெயர் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் எழுந்த கேள்வி, சச்சின் டெண்டல்கர் எந்த விதத்தில் குறைந்துவிட்டார் அவரின் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்பது தான்.

இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச அளவிலும் மிகவும் புகழ்பெற்ற, பல்வேறு சாதனைகளையும், பட்டங்களையும் பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது பெற்றவர். 463 ஒருநாள் போட்டியில் விளையாடி 18 ஆயிரத்து 426 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 96 அரைசதம் , 49 சதங்கள் அடித்துள்ளார். 200 டெஸ்ட் போட்டியில் 15 ஆயிரத்து 921 ரன்கள் சேர்த்துள்ளார். 51 சதங்கள், 68 அரைசதங்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில் டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டியில் 154 விக்கெட்டுகளையும் சச்சின் கைப்பற்றியுள்ளார்.

இத்தகைய சாதனைபடைத்த சச்சினின் பெயர் ஏன் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், ஹால் ஆஃப் ஃபேம்பட்டியலில் இடம் பெற வேண்டுமானால் அதற்கென சில விதிமுறைகளும்,வரைமுறைகளும் தேவை. அதை நிறைவேற்றியவர்களே இந்த பட்டியலில் இடம் பெற முடியும் என்பது ரசிகர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி என்னென்ன விதிமுறைகள்?

1. முதல் விதிப்படி, ஐசிசி ஹால் ஆஃப் பேம் பட்டியலில் ஒரு பேட்ஸ்மேன் இடம் பெற வேண்டுமானால், அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்திருக்க வேண்டும்.

2. மொத்தமாக 20 சதங்கள் அடித்திருக்க வேண்டும். அல்லது அவரின் பேட்டிங் சராசரி 50க்கு மேல் இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, ஐசிசி விதியின்படி சச்சினுக்கு கூடுதல் தகுதி இருக்கிறது.

3. 2-வது விதிப்படி பந்துவீச்சாளராக இருந்தால், எந்த விதமான போட்டியிலும் அதாவது ஒருநாள் அல்லது டெஸ்ட் ஆகியவற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 30 விக்கெட்டுகளுக்கும் குறைவில்லாமல் வீழ்த்திருக்க வேண்டும்.

4. இந்த விதியில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால், சச்சினைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன் அங்கீகாரத்தில் மட்டுமே இடம் பிடிப்பார் என்பதால், பந்துவீச்சாளருக்கான தகுதி தேவையில்லை.

5. 3-வதாக ஒரு வீரர் விக்கெட் கீப்பராக இருந்தால், ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்க வேண்டும்.

6. கேப்டனாக இருந்தால், அவரின் தலைமையில் 50 சதவீதத்துக்கு அதிகமான வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் விக்கெட் கீப்பர் இல்லை என்பதால், இந்தத் தகுதியும்,விதிமுறையும் அவருக்குப் பொருந்தாது.

7. 4-வதாக, ஒரு வீரர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்புதான், இந்த ஹால் ஆஃப் பேம் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில் ராகுல் டிராவிட் சச்சின் டெண்டுல்கருக்கு முன்பே கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். ஆதலால், ராகுல் டிராவிட்டின் பெயர் ஹால் ஆப் ஃபேமுக்கு பரிந்துரைக்கப்பட்டு இணைக்கப்பட்டது.

8. சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி விட்டு கடந்த 2013, நவம்பர் 16-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

9. ஐசிசி விதிப்படி ஹால் ஆப் ஃபேமுக்கு விண்ணப்பிக்க, பரிந்துரைக்க ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து, எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாதவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதிகளில் ஒன்றாகும்.

10. அந்த விதிமுறைகளின்படி பார்க்கப்போனால், சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று இன்னும் 5 ஆண்டுகள் நிறைவடையவில்லை. ஆதலால், இந்த ஆண்டு ஹால் ஆப் ஃபேம் பட்டியலுக்கு சச்சின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. ஒருவேளை அடுத்த ஆண்டு பரிந்துரைகப்பட்டால், நிச்சயம் சச்சினின் பெயர் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இணையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published.