சுரேஷ் ரெய்னாவுக்கு ராகுல் டிராவிட் சூட்டிய புகழாரம்!

பெங்களூரு: சுரேஷ் ரெய்னா ஒரு சிறந்த வீரர்; அவர் முன்கள ஆர்டரில் களமிறங்கியிருந்தால் இந்தியாவுக்காக இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்பார் என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்.

தோனி ஓய்வுபெற்ற ஆகஸ்ட் 15ம் தேதியே ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார்.

இந்நிலையில், ரெய்னா குறித்து ராகுல் டிராவிட் கூறியுள்ளதாவது, “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளுக்கும் நிறைய அருமையான தருணங்களுக்கும் மகிழ்ச்சியான் நினைவுகளுக்கும் சுரேஷ் ரெய்னா பெரிய காரணமாக இருந்திருக்கிறார்.

சுரேஷ் ரெய்னா, உலகக்கோப்பை வெற்றியாளர், சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றியாளர். பீல்டிங்கைப் பொறுத்தவரை அவர் அதிகப் பங்களிப்பு செய்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலும் பின்வரிசையில் களமிறங்கினார். கடினமான இடங்களில் பீல்டிங் செய்தார், சில உதவிகரமான ஓவர்களையும் வீசியுள்ளார். இந்த வகையில், அணிக்காக உழைத்தவர் ரெய்னா. திறமையான பேட்ஸ்மேன், நல்ல பீல்டர்!

உள்ளபடியே கூற வேண்டுமெனில், இன்னும் கொஞ்சம் முன்னால் களமிறங்கியிருந்தால் அவருக்கான ரன்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும். சென்னை அணிக்கு அவர் ஆடிய விதம் இதைப் பறைசாற்றுகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஒரு பெரிய வீரர்” என்று புகழ்ந்துள்ளார் டிராவிட்.

சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட்கள், 226 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 78 டி-20 போட்டிகளில் ஆடி, கிட்டத்தட்ட 8,000 ரன்களை குவித்துள்ளார்.